தெருக்கூத்து கிராமப் பகுதிகளில் நடத்தப்படும் ஒரு பாரம்பரிய கலையாகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது மக்களிடம் விடுதலை உணர்வை கொண்டுசெல்ல முக்கியப் பங்காற்றியது, தெருக்கூத்துதான்.
தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட குழுக்களில் ஐந்தாயிரம் தெருக்கூத்து நாடக கலைஞர்கள் உள்ளனர். புராண கதைகளை நாடகம் வடிவில் மக்களிடம் கொண்டுசெல்லும் இவர்கள், வண்ண வண்ணமாய் அரிதாரம் பூசிக்கொண்டிருந்தாலும், இவர்களின் வாழ்க்கை என்னவோ இருண்டுதான் கிடக்கிறது.
ஒருநாள் இரவு முழுவதும் கண்விழித்து கூத்து நடத்தினால் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை மட்டுமே இவர்களுக்கு வருமானமாக கிடைக்கும். இதை வைத்துதான் இவர்கள் தங்கள் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
இப்படி, ஏற்கனவே வேலைவாய்ப்பு குறைந்து பாதிக்கப்பட்டுள்ள நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை, கரோனா ஊரடங்கு இன்னும் கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக வருமானம் இல்லாமல் இவர்கள் தவிக்கின்றனர்.
நவம்பர் மாதம் தொடங்கி மே மாதம் வரை கோடை காலங்களில் மட்டுமே இவர்களால் கூத்து நடத்த முடியும். இந்த ஏழு மாதங்களில் வரக்கூடிய வருவாயை வைத்துக்கொண்டுதான், வருடம் முழுவதையும் இவர்கள் சமாளிக்கின்றனர்.