தர்மபுரி :தர்மபுரி பகுதியில் இருந்து பாலக்கோடு, ராயக்கோட்டை வழியாக ஓசூர் வரை புதிய நான்கு வழிச்சாலை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதிகளில் நில உரிமையாளர்கள் தங்களின் நிலத்தை வழங்க மறுத்து வருகின்றனர்.
தர்மபுரி விருபாட்சிபுரம் பகுதியில் சிலரின் வீடுகள் பாதிக்கப்படுவதாகவும், விவசாய நிலங்களுக்கு குறைந்த அளவு தொகையே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாலும், மக்கள் நிலம் தர மறுத்து வருகின்றனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தர்மபுரியில் இருந்து பாலக்கோடு, ராயக்கோட்டை வழியாக ஓசூர் வரை புதியதாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. தர்மபுரியை சேர்ந்த 40 கிலோ மீட்டர் பகுதி விவசாய நிலங்கள் இந்தப் பணிகளுக்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது; 18 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 11 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்காக பணம் வழங்கப்பட்டுள்ளது.
ஏழு கிராமங்களில் உள்ள சில இடங்களின் நில மதிப்பிற்கும், தற்போது அரசு வழங்கும் மதிப்பிற்கும் வேறுபாடு உள்ளதால் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். விருப்பாட்சிபுரம் பகுதியில் சாலை சந்திக்கும் இடத்தில் ஒரு கிலோ மீட்டர் பரப்பில் உள்ள நிலங்கள் மற்றும் வீடுகள் புதிய சாலையால் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பலர் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மக்களை பாதிக்காத வகையில், மாற்றுப் பாதையை வலியுறுத்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதவுள்ளேன். சாலை அமைக்க நிலம் வழங்கிய பலருக்கு இழப்பீடு தொகையை கிடைக்கப் பெறாமல் உள்ளது. அவர்களுக்கு விரைவில் இழப்பீட்டு தொகை பெற்று தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்" எனத் தெரித்தார்.