தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். இதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கடந்த ஒரு வாரமாக கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே வைரஸ் பரவல் குறைவான மாவட்டமாகவும் இறப்பு விகிதம் குறைந்த மாவட்டமாகவும் இருந்த தருமபுரியில் ஊரடங்கு தளர்வு காரணமாக தொற்று அதிகரித்துள்ளது. தொடர்ந்து பரவல் அதிகரித்தால் இன்னும் ஒரு வாரத்தில் தருமபுரி மாவட்டத்தில் சிகிச்சையளிக்க முடியாத சூழல் உருவாகும்.
மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி 2020-21இன் கீழ் ஒரு கோடி ரூபாய் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டு உபகரணங்கள் வாங்கவேண்டிய பட்டியலுடன் கடிதம் அனுப்பப்பட்டது. அது கரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. 2019-20ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் என்னுடைய கையொப்பம் இல்லாமல் ஒரு கோடி ரூபாய் நிதி எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் எதற்காக எடுக்கப்பட்டது என மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டதற்கு மருத்துவமனை உபகரணங்கள் வாங்க எடுக்கப்பட்டதாக விளக்கம் தரப்பட்டது. ஆனால், என்ன உபகரணங்கள் வாங்கப்பட்டது என்பதற்கான முறையான பதில் கிடைக்கவில்லை.