தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் நிதிநிலை அறிக்கை விவாதத்தில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "கரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு, ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவல் காரணமாக பலர் வருமானத்தை இழந்துள்ளனர். நான்கு சகாப்தங்களாக இல்லாத வேலையின்மை விழுக்காடு உள்ளது. நிதிநிலை அறிக்கையில் நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கை என்ற பெயரில் சமூக நலத்திட்டங்களுக்கான நிதியை குறைத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் பேசிய காணொலி வரி விதிப்பு
குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் நிதி, சுகாதாரத்திற்கான நிதி, கிராமப்புற மேம்பாட்டிற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் விவசாயத் தேவைக்கான உர மானியம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் கொள்கை பெரும் பணக்கார நிறுவனங்களுக்கு மட்டும் சாதகமாக உள்ளது. நடுத்தர வர்க்கத்திற்கு வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், கார்ப்பரேட் வரி 12 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக குறைத்துள்ளனர்.
நிதியமைச்சருக்கு நன்றி
ஒன்றிய நிதியமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், அவர்தான் ஏழைகள் பயன்படுத்தும் வைரங்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைத்து, பணக்காரர்கள் பயன்படுத்தும் குடைகள் மீதான வரியை ஏற்றி உள்ளார்.
மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளைக்கு முந்தைய ஆண்டுகளில் சுமார் 70 கோடியில் இருந்து 90 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போதுவெறும் ஒரு லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த ஏற்றத்தாழ்வு, ஏனெனில் இந்த நிறுவனத்துக்கு இஸ்லாமியர் பெயர் உள்ளதனாலா?. ஒன்றிய அரசு ஓய்வூதியம் பெறுவோரின் நிலையான மருத்துவ கொடுப்பனவு மாதத்திற்கு வெறும் ஆயிரம் மட்டுமே.
ஆனால் தற்போது மருந்துகள் மற்றும் சிகிச்சையில் நிலவும் விலை உயர்வைக் கருத்தில் கொண்டால், இந்தத் தொகை மிகவும் குறைவாக உள்ளது.
நிதி ஒதுக்கீடு
எனவே, மாதத்திற்கு 6,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். ஒரே நாடு ஒரே பதிவு என்பது மீண்டும் மாநிலத்தின் உரிமைகளில் கை வைக்கும் செயலாகும். இவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கான 8 ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு தொகை ஆயிரம் ரூபாய் மட்டுமே.
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக உள்ளது. இது காகிதமில்லா பட்ஜெட் அல்ல... அதனுடன் சேர்த்து மக்கள் நலன் இல்லாத பட்ஜெட்" என்றார்.
இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெல்லும் - ஓபிஎஸ்