தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி. செந்தில்குமார், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீரேந்திர குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தார். மனுவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கோரிக்கையை ஏற்று தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏடிஐபி முகாம் நடத்தி அதன்மூலம் மாற்றுத்திறனாளி பயனாளிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கியதற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
மேலும், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு விடுபட்ட ஏடிஐபி முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்க வேண்டும். தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளடக்கிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மூத்த குடிமக்களுக்கான முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்க சம்பந்தப்பட்டவர்களைப் பணிக்க வேண்டும்.