தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சன அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு முனி ஆறுமுகம் என்பவர் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்திருந்தார்.
முனி ஆறுமுகம் நூதன முறையில் நல்லம்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து பிச்சைக்காரர்போல் வேடமிட்டுக்கொண்டு கையில் திருவோடு ஏந்தி மற்றொரு கையில் வேட்புமனுவுடன் ஊர்வலமாக வந்தார்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 600 ரூபாய் கட்ட வேண்டும். அப்பணத்தை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குழுமியிருந்த பொதுமக்களிடம் பிச்சை எடுத்துக் கட்டினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முனி ஆறுமுகம், ”தமிழ்நாட்டில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஜனநாயகத்தை பணநாயகம் வீழ்த்திவருகிறது. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலுக்கு அடுத்ததாக அதிகப்படியான பணம் உள்ளாட்சித் தேர்தலில் செலவு செய்யப்படுகிறது. எளிய வாக்காளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிக்கக் கூடாது.
பிச்சைக்காரர் வேடமிட்டு வேட்புமனு தாக்கல் பணம் வாங்கிக் கொண்டு வாக்கு செலுத்தினால் அது ஜனநாயகத்துக்கு கேடு என்பதை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிச்சைக்காரர் வேடம் அணிந்து வேட்புமனுவை தாக்கல் செய்தேன்” என்றார்.