கரோனா வைரஸ் தொற்று காரணமாக சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் செல்ல மத்திய அரசு தடை விதித்திருந்தது. தொற்று பரவல் குறைந்ததால் மத்திய அரசு தொடர்ந்து தளர்வுகளை அறிவித்து வந்தது.
ஒகேனக்கல் பகுதியின் ஒருபுறம் தமிழ்நாட்டிற்கு சொந்தமாகவும், மறுகரை கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கும் சொந்தமாகவும் உள்ளது. வழக்கமாக கர்நாடக பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மாறு கொட்டாய் பகுதிகளிலிருந்து பரிசல் மூலம் தமிழ்நாடு பகுதியில் உள்ள மெயின் அருவி, சினி அருவி போன்ற பகுதிகளை பார்த்து மகிழ்வார்கள்.
இன்று(அக்.05) கர்நாடக பகுதிகளில் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை முதலே கர்நாடக சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அழகை பார்த்து ரசித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசும் தருமபுரி மாவட்ட நிர்வாகமும் ஒகேனக்கல்லில் குளிக்க அனுமதி வழங்காததால் கடந்த ஓராண்டாக ஒகேனக்கல் பகுதியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.