தருமபுரி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் மலர் சந்தை உள்ளது. இங்கு பென்னாகரம், இண்டூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பூ வருகின்றது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தருமபுரி மலர் சந்தையில் பூ விலை பன்மடங்கு உயா்ந்துள்ளது.
தீப ஒளி திருநாளை சிறப்பாகக் கொண்டாட பெண்கள் அதிகளவில் மல்லிகைப் பூ வாங்க குவிந்தனர். ஆனால் இன்று சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ஆயிரம் ரூபாய்க்கும் கனகாம்பரம் பூ கிலோ ஆயிரம் ரூபாய்க்கும் ரோஜா பூ ஒரு கட்டு 60 ரூபாய்க்கும் சாமந்தி பூ கிலோ 40 ரூபாய்க்கும் சம்பங்கி பூ கிலோ 120 ரூபாய்க்கும் பட்டன் ரோஸ் கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று மல்லிகைப் பூ, கனகாம்பரம் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு மடங்கு விலை அதிகரித்து ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. பூவின் விலை உயர்ந்தாலும் லாபம் முழுவதும் வியாபாரிகளுக்குத்தான் செல்கிறது. விவசாயிகளிடமிருந்து மல்லிகைப் பூ கிலோ 500 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வியாபாரிகள் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
இதனிடையே, கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு, பனிப்பொழிவு காரணமாக பூ வரத்து குறைந்துள்ளது. சந்தையில் பூ விற்பனையாகும் விலையை நேரடியாக விவசாயிகள் பெற வேண்டுமென்றால் தருமபுரியில் மலர் சந்தை அரசின் மூலம் நடத்தினால் மட்டுமே முழு லாபம் விவசாயிகளுக்கு கிடைக்கும் என விவசாயிகள் வருத்ததுடன் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தோவாளை மலர் சந்தையில் பூ விலை கடும் உயர்வு