தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படித்துவிட்டு வேலையில்லையா.? உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க.. தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் கே.சாந்தி அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி

By

Published : Apr 15, 2023, 12:06 PM IST

தருமபுரி: இதுகுறித்து ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "தமிழ்நாடு அரசு சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவிதொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம் ஒன்றுக்கு SSLC தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக்கல்வி (12ம்வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு SSLC மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 என வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 30.06.2023 உடன் முடிவடையும் காலாண்டிற்கு கீழ்கண்ட தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற, விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

மேற்கண்ட கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். SC மற்றும் ST பிரிவினருக்கு 01.04.2023 அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது.

விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் நேரிடையாக படித்துக்கொண்டிருக்க கூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்). பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மற்றும் இது போன்ற தொழில்நுட்பப் பட்டம் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெறத்தகுதியற்றவர்கள்.

இந்த உதவித்தொகையை பெற முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் 31.05.2023-க்குள் விண்ணப்பத்தினை தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளித்திடுமாறும் மேலும், ஏற்கனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவுபெறாது சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காதவர்கள், 31.05.2023-க்குள் சுய உறுதிமொழி ஆவணத்தை அளித்து தொடர்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கே.சாந்தி ஐஏஎஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒகேனக்கலில் "பரிசல் ஓட்டிகள் பகல் கொள்ளை" என புகார்.. நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்!

ABOUT THE AUTHOR

...view details