தருமபுரி:தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று (செப்.23) ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "தருமபுரி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்குவிற்கு உடனடி சிகிச்சை மேற்கொள்வதற்கு அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், மேலும் 4 அரசு மருத்துவமனைகளில் 60 படுக்கைகள் கொண்ட வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் குறைந்த அளவிலான டெங்கு பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ளது.
டெங்கு பாதிப்பினை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் உள்ள குடிநீர் தொட்டிகள் முழுவதும் குளோரினைக்ஷேசன் பணி மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு களப்பணியாளர்கள் மூலம் மருந்து தெளித்தல், கொசுப் புகை மருந்து அடிக்கும் பணிகள் செயல்படுத்தவும், காய்ச்சல் கண்ட பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீட்டில் உடைந்த பொருள்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.