தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டி கிராமத்தில், 2012 ஆகஸ்ட் மாதம் நிலப்பிரச்னை தொடர்பாக சென்னகிருஷ்ணன், சின்னானசாமி என்பவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சென்னகிருஷ்ணனின் அண்ணன் அக்குமாரி மற்றும் அவரது உறவினர் சதீஷ் ஆகியோர் சென்னகிருஷ்ணனுக்கு ஆதரவாக சின்னசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது சின்னசாமி கையில் வைத்திருந்த கத்தியால், அக்குமாரி மற்றும் சதீஷ் ஆகியோரை குத்தியுள்ளார். இதில், சதீஷுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அக்குமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கம்பைநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கின் விசாரணை தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையின் முடிவில் நிலத்தகராறில் அக்குமாரியை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக, சின்னசாமி, அவரது மனைவி கோவிந்தம்மாள், மகன்கள் ரஞ்சித், வசந்த ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜீவானந்தம் தீர்ப்பளித்தார். வசந்த் ஆஜராகாத நிலையில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல், பென்னாகரம் அடுத்த கூக்குட்டமருதஹள்ளியைச் சேர்ந்த பெருமாள் என்பவர், 2018 பிப்ரவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம், மாரியம்மன் கோயில் அருகே தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதில் அலறியடித்து ஓடிய சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.