தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு இவரது மகள் நித்யா 13. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை நித்யா அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மகன் சபரியை (10) சைக்கிளில் உட்காரவைத்து வேப்பிலைப்பட்டி - கேத்துரெட்டிப்பட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த தனியார் கல்லூரிப் பேருந்து, மாணவி சென்ற சைக்கிள் மீது மோதியதில் மாணவி நித்யா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திலிருந்தவர்கள் படுகாயம் அடைந்த சபரியை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்லூரிப் பேருந்து மோதி பள்ளி மாணவி பலி - பேருந்து சிறைபிடிப்பு தகவலறிந்த உறவினர்கள் ,பொதுமக்கள் பேருந்தைச் சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கடத்தூர் , பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் ஆட்சியர், தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும், விபத்துகள் ஏற்படும் சாலையை அகலப்படுத்த வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்டதால் தாளநத்தம்-பொம்மிடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கல்லூரி பேருந்து மோதி பள்ளி மாணவி பலி - பேருந்து சிறைபிடிப்பு இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட சார்-ஆட்சியர் ம.ப.சிவன் அருள், அரூர் டி.எஸ்.பி.செல்லபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறியதையடுத்துப் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய கல்லூரி பேருந்து ஓட்டுனரைத் தேடி வருகின்றனர்.