தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி டூ ஸ்ரீஹரிகோட்டா.. செயற்கைக்கோள் தயாரிப்பில் அசத்திய அவ்வையார் பள்ளி மாணவிகள்! - Space Kids

பிப்ரவரி 10ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஆசாதி சாட் - 2 செயற்கைக்கோள் தயாரிப்பில் பங்குபெற்ற தருமபுரி அவ்வையார் பள்ளி மாணவிகளுக்கு, பள்ளி மாணவர்கள் முன்னிலையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஆசாதி சாட் - 2 செயற்கைக்கோள் பாகங்களை தயாரித்த தருமபுரி அவ்வையார் பள்ளி மாணவிகள்!
ஆசாதி சாட் - 2 செயற்கைக்கோள் பாகங்களை தயாரித்த தருமபுரி அவ்வையார் பள்ளி மாணவிகள்!

By

Published : Feb 14, 2023, 11:35 AM IST

தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தரப்பில் அளித்த சிறப்பு பேட்டி

தருமபுரி:பிப்ரவரி 10ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து எஸ்எஸ்எல்வி டி2 என்ற ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் செலுத்தப்பட்ட இஓஎஸ் - 7, ஜனாஸ் - 1 மற்றும் ஆசாதிசாட் - 2 ஆகிய 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக வானில் நிலைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், விண்ணில் செலுத்தப்பட்ட ஆசாதி சாட் - 2 செயற்கைக்கோளைச் சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம், நாடு முழுவதும் உள்ள 750 பள்ளி மாணவியரை இணைத்து உருவாக்கியது. அதில், தருமபுரி மாவட்டம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 10 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்தனர்.

இதன் காரணமாக மாணவிகள் செயற்கைக்கோளில் பயன்படுத்தப்படும் ப்ரோக்ராம் என்பதை வடிவமைத்து அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டபோது, செயற்கைக்கோள் ப்ரோக்ராம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 9ஆம் வகுப்பைச் சேர்ந்த லாவண்யா, 10ஆம் வகுப்பு மாணவிகள் தாரணி, தீபிகா, மேகாஸ்ரீ, ஹரித்தா, சாமினி, வீரேஸ்வரி, காவியா மற்றும் 11ஆம் வகுப்பு மாணவி சத்தியவாணி உள்ளிட்ட 10 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பேபி, உஷா மற்றும் வளர்மதி ஆகியோர் தருமபுரியிலிருந்து ஸ்ரீஹரி கோட்டாவிற்குச் சென்றனர்.

அங்கு மாணவிகளின் பங்களிப்போடு உருவாகியுள்ள செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுவதை நேரில் பார்த்து தருமபுரி திரும்பினர். இந்த நிலையில், அவர்களுக்குப் பள்ளியில் இஸ்ரோ வழங்கிய சான்றிதழ்கள் மற்றும் பேஜ்களை பள்ளி தலைமையாசிரியர் தெளரசாள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து இது குறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்த அறிவியல் ஆசிரியர் பேபி, “ஆசாதி சாட் நிதி ஆயோக் மூலம் செயல்படக்கூடிய அட்டல் லேப். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மூலம் அவ்வையார் அரசு மகளிர் பள்ளி தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அனுப்பிய பேலோடில் மாணவிகள் சிறப்பாக புரோகிராம் செய்தது, எங்களுக்கும், எங்கள் பள்ளிக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு வாய்ப்பளித்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, தருமபுரி மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

இதனையடுத்து பேசிய 11ஆம் வகுப்பு மாணவி சத்தியவாணி, “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா தயாரித்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதைக் காண்பதற்காக எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதனை ஏற்று நேரில் பார்வையிடச் சென்றோம். இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த எங்களுக்கு, நேரில் பார்ப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

எங்களால் உருவாக்கப்பட்ட ஆசாதி சாட் - 2 விண்ணில் செல்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி. விண்வெளி ஆய்வு என்றால், ஆண்கள்தான் அதிகமாக இருப்பார்கள். பெண் விஞ்ஞானிகள் குறைவாக இருப்பார்கள். ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனம், இந்தியா முழுவதும் 75 அரசு பள்ளிகளில் படிக்கும் 750 மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கியது, மிகப்பெரிய வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம்.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, ஆன்லைன் மூலமாக எங்களுக்கு அறிவுறுத்தியதை நாங்கள் செய்திருந்தோம். பே-லோடு புரோகிராமில் வெப்பநிலை, ஈரப்பதம், செயற்கைக்கோள் இடைவெளி குறித்து ஆன்லைனில் எங்களுக்கு நடத்திய பாடத்தை புரோகிராமாக செய்திருந்தோம். அவர்கள் அதனை செயற்கைக்கோளில் இணைத்து அனுப்பினார்கள்” என்றார்.

இதையும் படிங்க:SSLV D2: விண்ணில் பறந்த மதுரை அரசு பள்ளி மாணவிகளின் செயற்கைக்கோள் பாகங்கள்!

ABOUT THE AUTHOR

...view details