தருமபுரி: கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் கே.பி.அன்பழகன். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கடந்த ஆண்டு இவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தருமபுரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.
கே.பி. அன்பழகன், இவர் தர்மபுரி பாலக்கோடு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இவர் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் அன்பழகன் பெயரிலும் அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 11 கோடி 32 லட்சத்து 95 ஆயிரத்து 85 ரூபாய் சொத்து சேர்த்து இருப்பது தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.
இதையடுத்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார், கே.பி. அன்பழகன் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். கே.பி. அன்பழகன் தேர்தலின் போது, வேட்புமனுவில் கூறப்பட்டிருந்த சொத்துக்களின் மதிப்பை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தியதாக தெரிவித்தனர்.