தருமபுரி:தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் உள்ளது, சிட்லிங் ஊராட்சி. 44-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் சுமார் 12 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடியின மக்கள். விவசாயம் மற்றும் விவசாய கூலித் தொழில் தான் இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரம்.
இந்த சிட்லிங் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. இப்பகுதி மக்களின் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன், இப்பகுதி கர்ப்பிணிகளுக்கு பிரவசம் பார்க்கும் சேவையையும் இந்த மருத்துவமனை வழங்கி வந்தது.
ஆனால், படிப்படியாக இந்த மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்வோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 2020-21ஆம் ஆண்டில் இந்த ஊராட்சி பகுதியில் கருவுற்ற பெண்களின் எண்ணிக்கை 132. இவர்களில் 14 பெண்கள் மட்டுமே சிட்லிங் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்த்துக் கொண்டார்கள். 10 பெண்கள் வேறு பகுதி அரசு மருத்துவமனைகளிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் பிரசவம் பார்த்துக்கொண்டுள்ளனர். இதனால் அரசின் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்ட பயன்களையும் அவர்களால் அடைய முடியவில்லை.
ஒதுக்கப்பட்ட 2 மருத்துவர்களில் ஒருவர் மட்டுமே பணியில் இருப்பதாலும், பணியாளர் பற்றாக்குறை, ஜெனரேட்டர் வசதியின்மை எனப் பல்வேறு புகார்கள் சிட்லிங் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுற்றி வட்டமடிக்கின்றன.