பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின்பேரில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய மக்கள் ஊரடங்கு இரவு 9 மணிவரை நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் ஊரடங்குக்கு பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஊரடங்கு உத்தரவு குறித்து செய்திக் குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். அந்தச் செய்தி குறிப்பில், "மார்ச் 22ஆம் தேதிகாலை 7 மணி முதல் 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்வதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது.
பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்" என வேண்டுகோள்விடுத்தார்.
மேலும், மக்கள் ஊரடங்கு குறித்த செய்திகள் கிராம மக்களிடம் சென்று சேரும் வகையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்திற்குள்பட்ட காட்டம்பட்டி கிராம ஊராட்சியில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.