தமிழ்நாடு

tamil nadu

ஏமாற்றிய பருமழை: தவிக்கும் தருமபுரி 'மா' விவசாயிகள்!

By

Published : Jun 26, 2020, 12:11 PM IST

தருமபுரி: இந்தாண்டு பருவமழை சரிவர பெய்யாததால் உற்பத்தி செய்யப்பட்ட குறைந்தளவு மாம்பழங்களைக்கூட, ஊரடங்கு காரணமாக நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை என மாவட்ட மா விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தருமபுரி மா விவசாயிகள்
தருமபுரி மா விவசாயிகள்

ஆண்டுதோறும் மாம்பழ சீசன் மார்ச் முதல் ஜூன் வரை தொடரும். தமிழ்நாட்டில் அதிகம் விரும்பப்படும் மாம்பழங்கள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உற்பத்தியாகக் கூடியவை. இந்த நிலையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) ஊரடங்கு காரணமாக கடந்தாண்டைவிட இந்தாண்டு 50 விழுக்காட்டிற்கும் மேல் மாம்பழ வியாபாரம் பாதிப்படைந்துள்ளது என மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, கம்பைநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. அப்படி தருமபுரியில் அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி, காலாபாடு, சக்கரகுட்டி, நீலம் உள்ளிட்ட 50 வகையான அதிக சுவையை தரக்கூடிய மாம்பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.

அறுவடை செய்யக்கூடிய மாம்பழங்களை விவசாயிகள் காரிமங்கலம் அகரம் சாலையில் உள்ள மாம்பழ மண்டிகளில் விற்பனை செய்கின்றனர். மேலும் சீசன்களில் தருமபுரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்ட மாம்பழ விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு விவசாயிகள், மொத்த வியாபாரிகள் விற்பனை செய்வார்கள்.

அக்கடைகளில் 1 கிலோ 20 ரூபாயில் தொடங்கி 80 ரூபாய் வரை தரத்திற்கேற்ப மாம்பழங்கள் விற்பனை செய்யப்படும். தருமபுரி மாவட்ட மாம்பழங்களுக்கு தனி சுவை உள்ளதால் சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகள் மாம்பழங்களை மொத்தமாக விலைபேசி வாங்கிச்செல்வார்கள்.

மேலும் அங்கு உற்பத்தி செய்யக்கூடிய மாம்பழங்கள் பெங்களூருவிற்கும் லாரிகளில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அப்படியிருக்கையில் மா விவசாயிகளை ஏமாற்றிவிட்டது பருமழை. கடந்தாண்டைவிட இந்தாண்டு பருவமழை மிக மிகக் குறைவாகப் பெய்துவருகிறது.

அதனால் அறுவடை காலங்களில் மம்பழங்கள் பழுக்காமலும், தண்ணீரில்லாமல் காய்ந்தும் விடுகின்றன. சொல்லப்போனால் கடந்தாண்டு உற்பத்தையைவிட இந்தாண்டு 70 விழுக்காடு உற்பத்தி பாதித்துள்ளது.

தருமபுரி மா விவசாயிகள்

அதனால் விவசாயிகள் உற்பத்திக்கான செலவைக்கூட ஈட்ட முடியாமல் தவித்துவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஏராளமான மா தோப்புகளில் மாங்காய்கள் மரத்திலேயே காய்ந்துவிடுவதால் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து மா விவசாயிகள், "ஏற்கனவே ஊரடங்கு காரணமாக மாம்பழங்கள் விற்பனை மந்தமாகி உள்ள நிலையில் பருவமழை சரிவர பெய்யாதது பெருத்த ஏமாற்றமாக உள்ளது.

காய்ந்த மாம்பழங்களைத் தவிர்த்து மீதமுள்ள மாம்பழங்களை விற்று பிழைப்பு நடத்துகிறோம். அப்படி விற்கும் மாம்பழங்களை வாங்க வருபவர்களும் ஊரடங்கினால் வாங்க வருவதில்லை. மா உற்பத்தி செலவுக்கான பணத்தைக்கூட விற்பனையில் ஈட்ட முடியவில்லை" என வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:இனி மாம்பழங்கள் வீட்டிற்கே வரும்... தெலங்கானாவில் புதிய திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details