அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டாலும், அதன் கூட்டணிக் கட்சியான பாஜக தலைவர்கள் பலர், முதலமைச்சர் வேட்பாளரைக் கூட்டணி தலைமைதான் முடிவுசெய்யும் எனத் தெரிவித்துவருகின்றனர். இதனால் இரு கட்சிகளின் நிர்வாகிகள் இடையே கடும் வார்த்தைப்போர் நடந்துவருகிறது.
முதலமைச்சர் பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் முருகன் இந்நிலையில், தர்மபுரி மாவட்ட பாஜக சார்பில் பாஜகவின் பல்வேறு அணி, பிரிவுகளின் மாவட்ட நிர்வாகிகள் மாநாடு தர்மபுரியில் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் மாநாட்டில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.
தர்மபுரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் மாநாடு இந்தக் கூட்டத்தில் பேசிய எல். முருகன், "வேல் யாத்திரைக்குப் பிறகு தமிழ்நாட்டில் பாஜக எழுச்சிப் பெற்றுள்ளது. வேல் யாத்திரை செல்லுகின்ற இடங்களிலெல்லாம் எதிர்பார்த்ததைவிட அதிகமான மக்கள் கூட்டம் திரண்டது. இதைக்கண்டு எதிர்க்கட்சிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக எல்லா விஷயங்களிலும் இரட்டை வேடம் போடுகிறது. முதலில் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் விபூதியைத் தட்டிவிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், யாத்திரைக்குப் பிறகு எங்களது கட்சியில் ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.
'திமுக சொன்னதைத் தான் நாங்களும் செய்துள்ளோம்' - எல். முருகன் விவேகானந்தர் பற்றிப் பேசுகிறார். மேலும் விவசாயிகள் விளைபொருள்களுக்குத் தாங்களே விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பதை திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
தற்பொழுது அதற்கான சட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்துள்ளார். திமுக சொன்னதைத் தான் நாங்களும் செய்துள்ளோம். ஆனால் இதை திமுக எதிர்க்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலமைச்சரை அரியணையில் அமர வைப்போம் - எல். முருகன் அதேபோல் மத்திய அரசு உயர் கல்வியில் படிக்கும் பட்டியலின மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை நிறுத்தியதாக ஸ்டாலினும் அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பரப்புரை மேற்கொண்டுவந்தனர்.
ஆனால் பிரதமர் மோடி உயர் கல்வி படிக்கும் பட்டியல் சமூக மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகையாக மாணவர்கள் பயன்பெறும் வகையில், 59 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளார்.
இதைப் போலவே திமுக தமிழ்நாட்டில் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினைகளை இரட்டை வேடம் போட்டுவருகிறது. தமிழ்நாடு மக்களும், விவசாயிகளும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலமைச்சரை அரியணையில் அமரவைப்போம்" என பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.