தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த பொய்யப்பட்டி பகுதியில் சென்ற வாரம் 10க்கும் மேற்பட்ட மாடுகள் சந்தேகமான முறையில் உயிரிழந்தன. பின்னர், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் அப்பகுதியில் முகாம் அமைத்து மாடுகள் உயிரிழப்பு ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்தனர். தற்போது மழை பெய்து வருவதால் ஆந்த்ராக்ஸ் நோயானது அரூர் பகுதியில் உள்ள கால்நடைகளை தாக்கி வருவதாக தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் இளங்கோவன் கூறுகையில், “அரூர் பொய்யபட்டி பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோய் கிருமி தாக்கத்தின் காரணமாக மாடுகளின் உயிரிழப்பு ஏற்படுகின்றது. எனவே, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நோய் தாக்கம் கண்டறியப்பட்ட பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் முகாம் அமைத்து 12, 750 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதுபோல ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி உயிரிழக்கும் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டாமல், அதனை புதைக்க கால்நடை உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரூர் பகுதியில் உயிரிழந்த கால்நடையை இறைச்சிக்காக வெட்டியதால் அதிலிருந்து வெளியேறிய ஆந்த்ராக்ஸ் கிருமியானது மற்ற பகுதிகளுக்கும் பரவி உள்ளது என்றார்.