தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வார்டுகளில் ஐந்து வார்டுகளில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அதிக அளவில் உள்ளனர். இதற்கு முந்தைய கால உள்ளாட்சி தேர்தல்களில் இந்த ஐந்து வார்டுகளிலும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்களே பிரதிநிதிகளாக வெற்றி பெறுவார்கள். தற்போது புதிய வார்டு மறுவரையால் ஐந்து வார்டுகளில் இரண்டு வார்டுகள் வேறு வார்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வார்டுகளுக்கான வாக்களிக்கும் வாக்குச்சாவடி மாற்றப்பட்டுள்ளது.
தருமபுரி அருகே வார்டு வரையறையில் குளறுபடி: இஸ்லாமியர்கள் மனு! - வார்டு வரையறையில் குளறுபடி
தருமபுரி: பாலக்கோடு பேரூராட்சியில் வார்டு வரையறையில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி இஸ்லாமிய சமுதாய மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதனிடையே இதனைக் கண்டித்து 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நேற்று பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் தற்போது வார்டு மறுவறையறையால் 7, 11 ஆகிய இரண்டு வார்டுகள் பிரிக்கப்பட்டு வேறு வார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இஸ்லாமியர்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் மூன்றாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாக்களிக்கும் வாக்குச் சாவடி உருது பள்ளியில் இருந்து அரசு மேல்நிலைபள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே எங்கள் சமுதாய மக்கள் பிரதிநிதித்துவம் பறிக்கப்படாமல் சீரமைப்பு செய்யவேண்டும். அவ்வாறு சீரமைக்கவில்லை என்றால் வாக்காளா் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைப்போம் என்று அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனா். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இன்னும் வெகு சில நாட்களே உள்ள நிலையில், இந்த புதிய பிரச்னை தற்போது தலை தூக்கியுள்ளது.