தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மூக்காரெட்டிபட்டி, அதிகாரபட்டி பகுதியில் பிரதம மந்திரி கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 10 கோடி ரூபாய் மதிப்பில் 2.4 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுவரும் தார்ச்சாலையில் பல்வேறு இடங்களில் சிறுபாலம், கல்வெட்டுகள், தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.
இந்தச் சாலைப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா திடீரென நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார். அப்போது, மூக்காரெட்டிப்பட்டி முதல் காந்தி நகர் வரை அமைக்கப்பட்டுள்ள சாலையை ஆய்வுசெய்தார். தொடர்ந்து சாலை அமைக்க எவ்வளவு ஜல்லி கற்கள், மண் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
திடீரென சாலையை வெட்டி எடுக்கச் சொல்லி அளவுகோல் மூலம் அளவீடு செய்தார். தொடர்ந்து எவ்வளவு ஜல்லி கற்கள், மண் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சல்லடை மூலம் சலித்து, ஜல்லிக் கற்களைத் தரம்பிரித்து அளவீடு செய்ய உத்தரவிட்டார்.