நேரடி விசாரணையில் நீதியரசர் தருமபுரி:1992ஆம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் வாச்சாத்தி வன்முறை. 1992 ஜூன் 20ஆம் தேதி அன்று, தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் சந்தன மரங்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் அக்கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
வீடு வீடாக புகுந்து சோதனை நடத்திய அதிகாரிகள் அங்குள்ள பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அனைவரையும் ஓரிடத்தில் குவித்து சரமாரியாக அடித்து துன்புறுத்தியதாகவும், பின்னர் 18 பெண்களை அருகில் இருந்து வனத்துறையினர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வன்முறையில் பலர் உயிரிழந்தனர். மேலும் 18 பெண்கள் மற்றும் சிறார்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இது தொடர்பாக, அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாமலை 1992ஆம் ஆண்டு அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் சில நிர்வாகிகள் இணைந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், வாச்சாத்தி வன்முறை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் சார்பாக குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து வாச்சாத்தி வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையில் திருப்தி இல்லாத பாதிக்கப்பட்ட கிராம மக்கள், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரியதை அடுத்து, வாச்சாத்தி வன்முறை வழக்கு 1996ஆம் ஆண்டு சிபிஐ இடம் மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செயப்பட்டு சேலம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து 2008ஆம் ஆண்டு இந்த வழக்கின் விசாரணை தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமையின் போது பணியில் இருந்த தர்மபுரி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த 7 பேர் தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் வாச்சாத்தி வன்முறை வழக்கை விரைவாக முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், ஐஎப்எஸ் அதிகாரிகள் 4 பேர் உள்பட வனத்துறையினர், காவல்துறை, வருவாய் துறையினர் என 215 பேர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றச்சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களை விசாரித்தப் பின், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று (மார்ச்.4) சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்தில் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
வாச்சாத்தி மலை கிராமத்தில் இருந்து கலசப்பாடி, அரசநந்தம் உள்ளிட்ட மலை கிராம மக்களை சந்தித்து அவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். ஆய்வின் போது தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம்" - வடமாநில தொழிலாளர்கள் பேசிய வீடியோ வைரல்!