தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு தினமும் இலவச 2 ஜிபி டேட்டா பயன்படுத்துவதற்கான டேட்டா சிம் கார்டுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு வேளாண் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கல்லூரி மாணவிகளுக்கு டேட்டா சிம் கார்டுகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பழகன் பேசியதாவது;
தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறையில் புதிதாக 1,666 பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 92 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் 2331 விரிவுரையாளர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதில் 1,059 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்வில் தவறுகள் நடந்துள்ளதால் அவர்கள் நியமனத்தில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரும் இனி இதுபோன்ற தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்கள் மீண்டும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,146 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்க அரசு முயற்சி செய்து வந்தது. இதற்கு நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுள்ளனர். மாணவர்களின் உயர் கல்வி வளர்ச்சிக்காக அரசு பல்வேறு முடிவுகளை மேற்கொள்ளும் போது பல்வேறு குளறுபடிகளை செய்து தடை செய்கின்றனர்.
இந்த தடைகளையும் மீறி மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கௌரவ விரிவுரையாளர்கள் பணி அமர்த்தப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மிகையாக உள்ள விரிவுரையாளர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்