தருமபுரி:நல்லம்பள்ளி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர், தீப்பாஞ்சி (வயது 40). ஐடிஐ படித்து முடித்து விட்டு பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லம்பள்ளி கிராமத்தின் ஒரு தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தீப்பாஞ்சி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதன் காரணமாக தீப்பாஞ்சியின் சகோதரர் சரவணனின் விருப்பத்தின் பேரில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மயக்கவியல் துறை தலைமை மருத்துவர் முருகேசன் தலைமையில் மருத்துவக்குழு அவரது இதயம், கணையம், கல்லீரல், கிட்னி ஆகிய நான்கு உள் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.
பின்னர், இந்த உடல் உறுப்புகள் காலத் தாமதமின்றி சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. விபத்தில் மரணம் அடைந்த தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் பிறருக்கு பயன் தரும் வகையில் தானம் செய்யப்பட்ட நிகழ்வு தீப்பாஞ்சியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மயக்கவியல் துறை தலைமை மருத்துவர் முருகேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.