தருமபுரி:பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் தருபரியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை கே.பி.ராமலிங்கம் சந்தித்தார்.
அப்போது அவர், “தேசியத்தையும் தெய்வீகத்தையும் முன்னிறுத்தி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சிகளை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாரத தேசம் மற்ற நாடுகளுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது. வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் நமது நாட்டை பிரதமர் மோடி வெற்றி நடை போட செய்துள்ளார். ஊழலற்ற திறமையான நிர்வாகத்தை பாரத பிரதமர் செயல்படுத்தி வருகிறார். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார்.
இதையும் படிங்க: "முதல்வர் உங்கள் மீது கடும் கோபத்தில் உள்ளார்.. பார்த்து நடந்துக்கோங்க" - அமைச்சர் கொடுத்த எச்சரிக்கை யாருக்கு?
தமிழக அரசு குலதெய்வ கோயில்கள் எல்லாம் அரசு கோயில்களாக மாற்றி அதில் வரும் வருவாயை கொள்ளையடித்து வருகிறது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் இருந்தாலும் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் விடுவதில் அரசியல் செய்து வருகிறது. கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அப்போதைய கர்நாடக முதல்வர் பொம்மையிடம் காவிரியில் தண்ணீர் திறந்து விடச் சொல்லி வலியுறுத்தினார். ஆனால் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேல்முறையீடு மேல்முறையீடு என்று காவேரியில் தண்ணீர் பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளார்.
புது டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தொடர்பான கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி தனது கோரிக்கையை நிறைவேற்றினால் தான் கூட்டணியில் தொடர்வோம் என்று அக்கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டார்கள். அதேபோல் காவிரி பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக காங்கிரஸ் அரசை காவேரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடச் சொல்லி இந்தியா கூட்டணியை வலியுறுத்துவாரா” எனத் தெரிவித்தார். அப்போது பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: "தமிழகத்தில் சமூகநீதி பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் பேட்டி!