தருமபுரி: காரிமங்கலம் அருகே உள்ள செல்லம்பட்டி, முருகன்காடு பகுதியைச்சேர்ந்தவர், மணி(65). இவருக்கும் உறவினர் தங்கவேல்(55) என்பவருக்கும் நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை மணி, தனது பேத்தி இந்துஜாவை பள்ளிக்கு அனுப்ப தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது தங்கவேல் போர்வையை போர்த்திக்கொண்டு கையில் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு, மணியை வழிமறித்து அவரது தலை மற்றும் கை கால்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த மணி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, இந்துஜாவை வெட்டுவதற்காக தங்கவேல் துரத்தியபோது அங்கிருந்து இந்துஜா தப்பி ஓடியுள்ளார்.
பிறகு ஆத்திரம் தீராத தங்கவேல், மணியின் வீட்டை நோக்கி சென்றார். இந்த தகவல் அறிந்த மணியின் மூத்த மகன் சேட்டு டிராக்டரில் வீட்டை நோக்கி சென்ற போது, டிராக்டரை வழிமறித்த தங்கவேல், சேட்டுவின் இடது காலை வெட்டியுள்ளார். அப்போது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து திருப்ப முற்பட்டபோது டிராக்டரில் இருந்த கலப்பையில் தங்கவேலுவின் தலை, கழுத்து, இடுப்பு ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.