தருமபுரி நகராட்சிக்கு சொந்தமான பொதுக்கழிப்பறை பச்சையம்மன் கோவில் அருகே உள்ளது. இந்தக் கழிப்பறையில் வாழை இலை வியாபாரி ஒருவர் தாம் விற்பனைக்கு கொண்டுவந்த வாழை இலைகளை கழிவறையில் அடுக்கிவைத்து, அதனை வெளியூர்களில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்கு அனுப்பி வைத்த காட்சி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
'இங்கு வாழை இலைகள் விற்கப்படும்..!' - பொது கழிவறையை கடையாக மாற்றிய வியாபாரி - public restroom
தருமபுரி: பச்சையம்மன் கோயில் அருகே உள்ள பொதுக்கழிப்பறையில் வாழை வியாபாரி ஒருவர் கட்டுக்கட்டாக வாழை இலைகளை விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்ட காட்சி பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கழிவறையைப் பயன்படுத்த சென்ற நபர் ஒருவர் தனது செல்போனில் இதனை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது தருமபுரியில் வைரலாக பரவி வருகிறது. வாழை இலையில் உணவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு மருத்துவ குணம் படைத்த வாழை இலைகளை கழிப்பறையில் வைத்து விற்பனை செய்வது மனிதத்தன்மை அற்ற செயல் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கழிவறையை பராமரித்து வரும் நகராட்சி ஊழியரின் உதவியோடுதான், அந்த வியாபாரி கழிப்பறைக்குள் வாழை இலைகளை வைத்திருக்க முடியும். இதற்கு உறுதுணையாக இருக்க கூடிய நகராட்சி பணியாளர்கள் மீது நகராட்சி நிர்வாகமும் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.