தர்மபுரி:மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தாய் சேய் நலம் மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவத் துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "ஆகஸ்ட் 5ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் உலகத்துக்கே ஒரு முன்னோடியான திட்டமாக தமிழ்நாட்டில் அமையவிருக்கிறது. நீரழிவு, ரத்த அழுத்த நோயாளிகள் சுமார் 20 லட்சம் பேர் அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரைகளை வாங்கி வருகின்றனர்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம் ஆனால் கரோனா தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மருந்து மாத்திரைகளை வாங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆகவே, இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் முதலமைச்சர் ஓசூர் பகுதியில் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவிலேயே தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதனை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஜூலை மாதத்தில் இலக்கைவிட 12 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவத் துறை ஊழியர்கள் மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:சிட்டி கேட் நிலையத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர்!