தர்மபுரி: தர்மபுரி - மொரப்பூர் இடையிலான ரயில்வே திட்டத்தின்கீழ் பழைய தருமபுரி ராமக்காள் ஏரி பகுதியில் நடைபெற்ற நில அளவைப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார் பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மொரப்பூர் - தர்மபுரி ரயில்வே திட்டத்தின் நில அளவைப் பணிகள் தற்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.
பழைய தர்மபுரி பகுதியில் மட்டும் நில அளவைப் பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் நில அளவை குறித்து கேட்டறிந்து அதற்கான அறிவிக்கை வந்தவுடன் நில அளவைப் பணிகள் முடிவு பெறும்.
நில அளவைப் பணிகளில் சவுளுபட்டி பகுதியில் 27 வீடுகளும், மூக்கனூர் பகுதிகளில் 97 வீடுகளும் பாதிப்படையும் வகையில் உள்ளது. வீடுகள் பாதிக்காத வகையில் மாற்றுப் பாதையில் ரயில்வே பாதை அமைக்கக்கோரி இம்மாத இறுதியில் டெல்லி மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளை வலியுறுத்த உள்ளேன்.
வீடுகள் பாதிக்கப்படாமல் ரயில் பாதை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழைய மொரப்பூா், தருமபுரி ரயில்வே பாதை தருமபுரி நகருக்குள் 8 கிலோமீட்டர் இருந்த நிலையில் தற்போது 5 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.