தருமபுரி மாவட்டம் அரூர் - சேலம் பிரதான சாலையில் வாரந்தோறும் செயல்படும் மிகப்பெரிய வாரச்சந்தை கோபிநாதம்பட்டி கூட்டுரோடு புதன் சந்தை ஆகும். இச்சந்தை மிகவும் பழமையானதாகும். இந்தச் சந்தையில் காய்கறிகள், விவசாய தளவாடக் கருவிகள் விற்கப்படுகின்றன.
தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கோழி, ஆடு, மாடுகளை வியாபாரிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மேலும் இந்தச் சந்தையிலிருந்து மாடுகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு, இந்த வாரச் சந்தையில் ஆடு, மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களை விட விலையும் அதிகரித்துக் காணப்படுகிறது. இன்றைய சந்தையில் சுமார் ஆயிரத்து 500 ஆடுகளும், 3 ஆயிரம் மாடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.
கடந்த வாரங்களை விட ஆடு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை கூடுதலாக விற்பனையானது. இறைச்சிக்காக ஆந்திராவிலிருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த ஆடுகள் விலையானது ரூ. 15 ஆயிரம் முதல் முதல் ரூ. 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஆடு, மாடுகள் விற்பனை அமோகம் மாடுகள் விலையைப் பொறுத்தவரை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது. கால்நடைகள் விலை அதிகரித்திருந்ததால், ஒரு சிலர் வாங்க முடியாமல் திரும்பி சென்றதையும் பார்க்க நேர்ந்தது.
இன்று நடைபெற்ற சந்தையில் மட்டும் சுமார் ரூ. 2 கோடிக்கும் மேல் வர்த்தம் நடைபெற்றதாகவும், அதில் ஆடு ரூ.45 லட்சத்திற்கும், மாடுகள் மட்டும் ரூ. 1.50 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விஷம் கலந்த தண்ணீரால் 20 ஆடுகள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை