தர்மபுரி: அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கன்னியப்பன். கன்னியப்பன் அரூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில், 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று (செப்.1) முதல் நாள் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, கன்னியப்பன் தனது வீட்டிலிருந்து அரூர் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு வந்துள்ளார். தொடர்ந்து மாலை பள்ளி முடிந்த பிறகு, வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இருசக்கர வாகனத்தின் மீது மோதிய பேருந்து
அப்போது தனக்கு தங்கை முறை கொண்ட மாணவியை உடன் அழைத்து செல்வதற்காக, அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார் கன்னியப்பன்.
அப்போது அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில், சேலத்திலிருந்து திருவண்ணாமலை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, எதிர்பாராத விதமாக கன்னியப்பனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவன் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:குடிபோதையில் ஐடி ஊழியர் செய்த காரியம்: காலை இழந்த காவலாளி