சட்டப்பேரவைத் தேர்தலில் ஆன்மீக அரசியலுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும்தான் போட்டி - அர்ஜூன் சம்பத் - அர்ஜுன் சம்பத்
தருமபுரி : வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆன்மீக அரசியலுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும்தான் போட்டி என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
பெங்ளூருவில் நடைபெற்ற கலவரத்தைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ள இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் தருமபுரி வழியாகச் சென்றார்.
அப்போது அவருக்கு, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத், “திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் திமுக, அதிமுகவினரின் கைகளில் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதற்காக நாங்கள் நீதிமன்றத்தை நாடி பல சொத்துகளை மீட்டுள்ளோம்.
இந்து சமய அறநிலைத்துறையை கலைத்துவிட்டு பக்தர்களிடம் கோயில் நிர்வாகத்தை ஒப்படைத்தால், ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்டெடுக்கலாம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருபக்கம் ஆன்மீக அரசியல், மற்றொரு பக்கம் திராவிடக் கட்சிகள் என இந்த இரு அணிகளுக்கும்தான் போட்டி இருக்கும். இதில் ஆன்மீக அரசியல் வெற்றி பெறும்.
ஆன்மீக அரசியல் என்பது பதவியை முன் நிறுத்தியது அல்ல. கொள்கை, மக்களை முன் நிறுத்திதான் நடைபெறும். அதிமுக வேறு கட்சி, பிஜேபி வேறு கட்சி. தேர்தல் வந்தால் கூட்டணி வைப்பார்கள் அல்லது பிரிந்து விடுவார்கள். அது அக்கட்சிகளின் விருப்பம். ஆனால், திமுக இந்த இரு கட்சிகளுக்கும் இடையே சண்டை மூட்டி வருகிறது. தமிழ்நாட்டில் திமுகவின் அரசியல் சித்து விளையாட்டு இனி எடுபடாது.
காவிரி ஆற்றுத் தண்ணீரை தருமபுரி மாவட்ட விவசாயப் பாசனத்திற்கு கொண்டு வந்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை மட்டுமல்ல, இந்து மக்கள் கட்சியின் கோரிக்கையாகும். திமுக தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட மக்களின் நீர் மேலாண்மை திட்டத்திற்காகப் போராடாமல் அரசியல் நாடாகமாடுகிறார்” எனத் தெரிவித்தார்.