தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூரில் பாமக கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை முதலமைச்சர் உடனடியாக நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசைக் கேட்க வேண்டாம். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது வேறு, மக்கள் தொகை கணக்கெடுப்பது என்பது வேறு. சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை மாநில அரசு யார் வேண்டுமானாலும் நடத்தலாம்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை என்பது அதிகரித்து உள்ளது. இதனால் படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனைத் தடுப்பதற்குக் கூடுதலாக காவல் துறையில் 20 ஆயிரம் பேரை பணியமர்த்த வேண்டும். எவ்வளவோ பேர் இதற்குத் தகுதியான வகையில் இருக்கிறார்கள். இளைஞர்கள், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல் துறையினர் உள்ளிட்டவர்களை கூடுதலாக பணியமர்த்தி போதைப்பொருட்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜகவினர், பெரியார் குறித்து இழிவாகப் பேசி வருகின்றனர், அது தவறானது. தமிழ்நாடு என்பது பெரியார் மண், சமூக நீதிக்கு முக்கியக் காரணமானவர், பெரியார். அண்ணாமலை மற்றும் அவர் சார்ந்த கட்சியினர் பெரியாரைப் பற்றி இழிவாகப் பேசக்கூடாது. பெரியாரைத் தரக்குறைவாக பேசினால் பாமக வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.