தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எங்கும் மது..எதிலும் மது..' இதுதான் திராவிடமாடல் அரசு - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு - alcohol along with

படிப்படியாக மதுவிலக்கு என்ற கூறியதை மறந்துவிட்ட நிலையில் தமிழ் மக்கள் மீதும், பெண்கள் மீதும் அக்கறையிருந்தால் இங்கு மதுவிலக்கு கொண்டுவர வேண்டுமென அன்புமணி ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால், பாஜக மேகதாது அணை கட்ட அழுத்தம் தராது எனவும், இது தமிழ்நாட்டிற்கு தான் நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 21, 2023, 6:14 PM IST

Updated : May 21, 2023, 6:39 PM IST

கள்ளச்சாராயம் அரசு சாராயம் வெவ்வேறு அல்ல..இரண்டும் ஒன்றுதான்! என அன்புமணி ராமதாஸ் பேச்சு

தருமபுரி: தருமபுரியில் அதியமான் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாபெரும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி இன்று (மே 21) முதல் ஜூன் 4 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை விளக்கேற்றி வெண்புறாக்களை பறக்கவிட்டு அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். இந்த கிரிக்கெட் போட்டியில் தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதியில் 15 மையங்களில் 830 அணிகளுக்கும் மேல் கலந்துகொண்டு விளையாட உள்ளனர். இன்று முதல் 4.6.23 வரை 14 நாட்கள் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் பரிசாக 2 லட்சம் ரூபாயும், 2ம் பரிசாக 1 லட்சம் ரூபாயும், 3ஆம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் பரிசாகவும் வெற்றி கோப்பையையும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்க உள்ளார்.

இப்போட்டியை தொடங்கி வைத்தப் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், 'கரோனா காலத்திற்கு பின்னர் கோடையில் கஞ்சா, மது என மாணவர்கள் வழிமாறி போகக்கூடாது என்பதற்காக சாதி மதம் கடந்து நடத்தும் இந்த கிரிக்கெட் போட்டியில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தருமபுரியில் நுழையும் காவிரி நீரில் கடந்த ஆண்டு 600 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலந்தது. ஆகவே, இவ்வாறு வீணாவதை தடுத்து 3 டிஎம்சி நீரை இங்குள்ள ஏரி, குளங்களில் நிரப்பினாலே போதுமானது. இதனை செய்தால் இங்குள்ள 3 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வேறு பகுதிகளுக்கு செல்வதைத் தடுக்க முடியும் எனவும் ஆதலால், தமிழ்நாடு அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

இந்தாண்டு வெளியான பொதுத் தேர்வு முடிவுகளில், கடைசி 15 இடங்களில் உள்ள மாவட்டங்களின் வரிசையில் வடமாவட்டங்கள் இடம்பெற்றதாகவும் இதனிடையே, இப்பகுதிகளில் தான் அரசு டாஸ்மாக் விற்பனை அதிகமாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு இந்த 'திராவிரமாடல்' அரசு என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்று கேள்வியெழுப்பினார். மேலும், மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மது விற்பனை செய்யவிட்டால், கள்ளச்சாராயம் பெருகும் என அரசு இந்த மதுக்கடைகளை திறந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இதனிடையே தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாகவும், இவை யாவும் ஆட்சியாளர்கள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் என எல்லோருக்குமே தெரிந்துதான் நடப்பதாகவும் கடுமையாக சாடினார்.

இதையும் படிங்க:இதெப்படி.. கமல்ஹாசன் பாடலை பாடி பாஜகவினர் டாஸ்மாக் ஒழிப்பு போராட்டம்..!

தற்போதுள்ள மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மக்கள் மீது மதுவை திணிப்பதாகவும், இவர் நடக்கும் திமுக ஆட்சிக்கே கெட்டப்பெயரை வாங்கித் தருவார் என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இளைஞர்கள் மது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறினார். அத்துடன், 'நாங்கள் எங்கும் தமிழ்.. எதிலும் தமிழ்..' என்று கேட்பதாகவும் ஆனால், தமிழ்நாட்டில் 'எங்கும் மது.. எதிலும் மது..' என்றுதான் உள்ளதாகவும் கடுமையாக குற்றம்சாட்டிய அவர், இதுதான் திராவிடமாடல் அரசா? என கேள்வியெழுப்பினார்.

தேர்தலுக்கும் முன்னர், தமிழ்நாட்டில் படிபடியாக மதுவிலக்கு என்று சொன்னதாகவும், இதுவரையில் எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன என்றும் அப்படியே மூடினாலும் வருவாய் இல்லாத கடைகளை மட்டும் மூடுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டு மக்கள் மீதும், பெண்கள் மீதும் அக்கறையிருந்தால் இங்கு மதுவிலக்கு கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்தினார். மேலும், தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் அதிகப்படியாக பட்டியல் இன மக்கள் மற்றும் வன்னியர் சமூக மக்கள் அதிகமாக உள்ள நிலையில், பட்டியல் சமூக மக்களுக்கு இன்னும் இட ஒதுக்கீடு வேண்டும் என வலிறுத்தினார். அதே நேரத்தில், வன்னியர் சமூக மக்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக கொண்டு வந்து சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதை, தமிழ்நாட்டின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கிறேன் என்றார். ஏனென்றால், மேகதாதுவில் அணைக்கட்ட பாஜக அழுத்தம் கொடுக்காது எனவும் ஏனென்றால், அது காங்கிரஸ் கட்சிக்கு நற்பெயர் வந்துவிடும் எனவும் அதனால், நமக்கு நல்லதுதான் என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் நேரடியாக கடைகளுக்கு செல்வதை சிபிஐ விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறிய அவர், அவ்வாறு மது விற்பனை செய்யும் 11 ஆலைகளில் மின்சாரம், தண்ணீர் எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதன் மூலம் அவற்றை கண்டறிய முடியும் என்றார். ஆகவே, இதனை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"ஆளுநராக நான் இருந்தால் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருப்பேன்" - அண்ணாமலை!

Last Updated : May 21, 2023, 6:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details