தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சமூகநீதி பேசும் திமுக ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறது?" - அன்புமணி ராமதாஸ்! - சாதிவாரி கணக்கெடுப்பு

Anbumani ramadoss: விளைநிலங்களை அழித்து தொழிற்சாலைகளை உருவாக்கி ஏற்படும் வளர்ச்சி தேவையில்லை என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் திமுக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

Anbumani ramadoss questions why DMK reluctant to conduct a caste-wise census
அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 7:09 PM IST



தருமபுரி:நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரிநாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எனவும் கூட்டணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், "தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள நீர் பாசன திட்டங்களை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தொடர் விபத்துக்கள் நடைபெற்று வரும் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையை பகுதியை சீர்படுத்த வேண்டும்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் விபத்துகளில் சிக்குபவர்களளை காப்பாற்ற முடியாமல் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அல்லது சேலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு மருத்துவர்கள் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மொரப்பூர் தருமபுரி ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகளை அரசு விரைவு படுத்த வேண்டும். தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைவிடத்தில் தார் சாலை ஒன்று மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. எவ்வித தொழிற்சாலைகளும் இதுவரை வரவில்லை.

பெங்களூரு, கோவை பொருளாதார மண்டலத்தில் உள்ளதால் எதிர்காலத்தில் இப்பகுதிகளில் ஏற்படுத்தப்படும் தொழிற்சாலைகளால் அபரிவிதமான வளர்ச்சி ஏற்படும். தமிழ்நாட்டில் 70% தொழிற்சாலைகள் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது. செய்யாறு சிப்காட் அமைப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விவசாய விளை நிலங்களை அழித்து அங்கு தொழிற்சாலைகள் அமைத்து ஏற்படும் வளர்ச்சி தேவையில்லை. சென்னைக்கு அருகில் தொழிற்பேட்டைகள் அமைப்பதை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் தரிசு நிலங்களில் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைப்பதால் அடுத்த தலைமுறைக்கு நாம் எதை விட்டு செல்ல போகிறோம் என்பதை உணர வேண்டும்.

மதுவை பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று திமுக அறிவித்தது. ஆனால் இதுவரையில் இதை செயல்படுத்தவில்லை. இதற்கு மாறாக மதுவின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

பல்வேறு வடிவங்களில் கஞ்சா விற்பனை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதுவால் தற்போதைய தலைமுறை பாதிப்படைந்து வருகிறது. அடுத்த தலைமுறை கஞ்சா என்னும் போதை பொருளால் பாதிப்பதை தடுக்க வேண்டும். இதற்காக காவல்துறையில் உள்ள மது ஒழிப்பு பிரிவிற்கு கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும்.

தமிழக அரசில் 5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளது. இதை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 75 சதவீதமாக இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என தெரிவித்துள்ளது. தொடர்ந்து சமூக நீதி குறித்து பேசி வரும் திமுக ஏன் சாதிவாரியை கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறது?.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும். கூட்டணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வழங்கும் நிதியை போல தமிழகத்திற்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் பணிகள் விரைவில் நடைபெறும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:“திமுக அரசு மது விற்பனை இலக்கை 60 ஆயிரம் கோடியாக மாற்றுவதில் முனைப்பு காட்டுகிறது” - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details