தருமபுரி: ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம் இன்று (மே15) தருமபுரியில் நடைபெற்றது. இந்த விழாவில் பாமகவின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பாமக மாநில தலைவர் ஜிகே மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்:கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக போராடியது பாமக தான். அது திமுகவும், அதிமுகவும் ஆட்சியில் செய்த சாதனை அல்ல. அது பாமக சாதனை. திமுகவிற்கு திராவிட மாடல் என்றால், பாமகவிற்கு பாட்டாளி மாடல்.
பாமக பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் என்ற அடிப்படையில் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தோம். அடுத்த 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பாமகவின் 2.0 என்ற அடிப்படையில் தேர்தலை சந்திக்கஉள்ளோம். அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” எனப் பேசினார்.
பூரண மதுவிலக்கு: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது எங்களின் நீண்டநாள் கோரிக்கை. இதை திமுக அரசியல் ரீதியாக, பூரண மதுவிலக்கு என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசு பூரண மதுவிலக்கு என்பதை பற்றி பேசவில்லை.
செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி வருகின்ற நான்காண்டுகளில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு எவ்வாறு செயல்படுத்தப்பட உள்ளது. எத்தனை கடைகள் மூடப்படும் என்பது குறித்து முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும். அதை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்பது குறித்து அரசு அறிவிக்க வேண்டும். ஏனென்றால் அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு மிக மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகள் அல்ல பள்ளி மாணவிகள் கூட குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதேபோல் போதைப்பொருள்கள் சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. அதிகப்படியாக கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகாமையிலேயே கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் எளிமையாக கிடைக்கின்றன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதைக் கவனத்தில் கொண்டு இதற்காக தனியாக ஒரு நாள் ஒதுக்கி மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், அனைத்து கட்சி அரசியல் தலைவர்களோடு கூட்டம் நடத்த வேண்டும். இதன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஆணையிட வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டம்: அதேபோல் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் அதிகப்படியாக இருந்து வருகிறது. இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது போன்ற காரணங்களை சொல்ல வேண்டாம். உடனடியாக இதை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக உடனடியாக சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து, அடுத்த தலைமுறையை அழிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஓர் ஆண்டுகளில் 10 மாதங்கள் கரோனா நடவடிக்கையில் முடிந்துவிட்டது. இதில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நிதியமைச்சர் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இது அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்” எனத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாமக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, தேர்தல் அறிவித்த பிறகு, அதை பற்றி தெரிவிக்கின்றோம் என பதிலளித்தார். மேலும் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படுகிறதா என்ற கேள்விக்கு, ‘என்னிடத்திலிருந்து ஏதாவது பிடுங்க வேண்டும் என்று கேட்கிறீர்கள்” என புன்னகையித்தார்.
எதிர்க்கட்சி பாமகதான்:தொடர்ந்து பேசுகையில், “இன்றைக்கு உண்மையிலேயே எதிர்க்கட்சியாக பாமக தான் செயல்பட்டு வருகிறது. மக்களின் பிரச்சினைக்கு குரல் கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டின் உண்மையான எதிர்க்கட்சி பாமகதான் இதனை போகப் போக தெரிந்து கொள்ள போகிறீர்கள்.
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வு இருக்காது என சட்டமன்றத்தில் அமைச்சர் தெரிவித்த நிலையில், தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்துவது என்பது சரியில்லை. தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை நாங்கள் செய்யவில்லை. எங்களுக்கு யாரிடமும் நெருக்கமும் இல்லை, எதிர்ப்பும் இல்லை.
எங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் எங்களது இலக்கு. அதை நோக்கித்தான் சொல்கின்றோம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ஒருசில மாவட்டங்களில் இல்லை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை அரசாங்கம் அதிக கவனம் எடுத்து சரி செய்ய வேண்டும், அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திராவிடர் மாடல் ஆன்மீகத்தை புறந்தள்ளிவிட்டு தமிழ்நாட்டில் வளரமுடியாது - அர்ஜூன் சம்பத்