தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடை பயணத்தை நேற்று (ஆக. 19) தொடங்கினார். மூன்று நாள்கள் நடைபெறும் இந்த நடை பயணத்தின் மூலம் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்த உள்ளார்.
இந்த நடை பயணத்தை ஒகேனக்கலில் தொடங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி மூன்று நாள் நடை பயணத்தை தற்போது ஒகேனக்கலில் தொடங்கியிருக்கிறேன். தமிழ்நாட்டிலேயே தர்மபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம். இங்குள்ள மக்கள் வாழ்வாதாரம் இழந்து, போதிய வேலைவாய்ப்பின்றி, தொழில் வாய்ப்பின்றி, போதுமான குடிநீர் வசதி இன்றி உள்ளனர். மேலும் இந்த மாவட்டத்தில் நிலத்தடி நீரில் புளோரோசிஸ் என்னும் நச்சுப்பொருள் கலந்துள்ளதால் இங்குள்ள மக்கள் உடல்நலம் மற்றும் மனநலத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரியில் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால், மாவட்டத்தில் வாழும் சூழலின்றி சுமார் 4 லட்சம் பேர் வேலைத் தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றி இங்குள்ள உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்ப வேண்டும்.
வெள்ளப்பெருக்கு காலங்களில் காவிரி ஆற்றில் செல்லும் உபரிநீரில் சுமார் மூன்று டிஎம்சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும். கடந்த 35 நாட்களில் காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 2.5 லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் சென்றுள்ளது. சுமார் 161 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது.
மூன்று டிஎம்சி தண்ணீரை மட்டுமே காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் நீரேற்று முறையில் எடுத்து இங்குள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்பினால் மாவட்டத்தில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இது தீர்வாக அமையும். தற்போது தர்மபுரியில் நிலத்தடி நீர் 700 முதல் 1000 அடியில்தான் உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றிய பின் 50 முதல் 60 அடியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
தற்போது தென்மேற்கு பருவமழை காலத்திலும் அடுத்து வரும் வடகிழக்கு பருவமழை காலத்திலும் சேர்த்து காவிரி ஆற்றில் சுமார் 200 டிஎம்சி தண்ணீருக்கு மேல் வீணாக கடலில் கலக்கப்போகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு சுமார் 700 முதல் 800 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும்.