தர்மபுரி:கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளனர்.
இந்நிலையில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை அரசு நிகழ்ச்சிகளில் அழைப்பு தராமல் திமுக மாவட்ட பொறுப்பாளர்களை வைத்து பூமி பூஜை மற்றும் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதாக அதிமுகவின் இரண்டு எம்எல்ஏக்கள் தர்மபுரி ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார், அரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கீழனூர் பகுதியில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த அதிமுக காலத்தில் பாலம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்ட நிலையில் இன்று தர்மபுரி திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி பூமி பூஜை செய்துள்ளார். இப்பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான தனக்கு தகவல் தராமல் பூமி பூஜை நடைபெற்றுள்ளது.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை புறக்கணித்து பூமி பூஜைகள் மற்றும் திறப்பு விழாக்கள் நடைபெறுகிறது . இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே புகார் தெரிவித்தோம், அதிகாரிகள் தகவல் ஏதும் தராமல் பூமி பூஜை நடைபெற்று உள்ளது.