தருமபுரி:தருமபுரி நகராட்சி பகுதியில் குளோரின் அதிகமான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்களுக்கு தொண்டை வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நகராட்சி அலுவலர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நிலத்தடி தண்ணீரில் ஃப்ளூரைடு கலந்திருப்பதால் எலும்பு தேய்மானம், பற்களில் கறை உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வந்தனா். மாவட்ட மக்கள் சுத்தமான குடிநீரை பெற்று பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு கடந்த 2008ஆம் ஆண்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை (Hogenakkal Combined Water Supply Scheme) ரூ.1928 கோடி மதிப்பீட்டில் அன்றைய திமுக அரசினால் தொடங்கிவைக்கப்பட்டு, இத்திட்டம் 2013ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. தருமபுரி மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக 80 சதவீத மக்கள் தங்களது தாகத்தை தணித்து வருகின்றனர்.
தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீரைப் பெற்று மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் இருந்து குடிநீரை நகரப் பகுதி மக்களுக்கு நகராட்சி வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் 18 நாட்களாக விநியோகிக்கப்பட்ட குடிநீரில் அதிக அளவு குளோரின் கலந்திருப்பதாக (Chlorine in drinking water) பொதுமக்கள் குற்றம்சாட்டினர். குளோரின் அளவு அதிகமாக கலந்திருந்ததால் தண்ணீர் குளோரின் வாசனையுடன் இருப்பதால் குடிக்க முடியவில்லை என்றும்; குடித்தால் தொண்டை வலி, தொண்டைப்புண் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதன் ஒருபகுதியாக, கடந்த 18ஆம் தேதி விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் வழங்கி சோதனை செய்தபோது அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கமாக குடிநீரில் வீடுகளுக்கு வழங்கும்பொழுது அங்கு குளோரின் அளவு 0.2% இருக்க வேண்டும். இதே குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் அளவிடும் பொழுது 5.02 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால், வழங்கப்பட்ட குடிநீர் பொதுமக்களின் வீடுகளிலிருந்து சேகரித்து சோதனை செய்தபோது குளோரின் 5.2 சதவீதம் இருந்துள்ளது.
இதன் காரணமாக, குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு தொண்டை வலி, தொண்டைப்புண் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு தொடர்ந்து 18 நாட்களாக, குளோரின் அளவு அதிகமாக உள்ள குடிநீரை விநியோகம் செய்ததால் பொதுமக்கள் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை தொடர்புகொண்டு புகார் செய்ததை அடுத்து, அதிகாரிகள் தற்போது குடிநீரில் குளோரின் அளவை குறைத்துள்ளனர்.