தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் உதயா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் வரவு, செலவினங்கள் குறித்து அறிக்கை வாசிக்கப்பட்டது. அப்பொழுது ஒரு சில பணிகளை செய்யாமலேயே, நிதி எடுப்பதாக மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய பொது நிதியிலிருந்து சமையல் கூடம் கட்டுவதற்கு நான்கு இடங்களுக்கு ஒன்றிய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல், இரவு 8 மணி அளவில் ஒப்பந்தம் விடப்பட்டதாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருப்பினும் அந்த பணிகளுக்கு அதிகாரிகள் ஒப்பந்தம் விடாமல், ஒன்றிய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குத் தெரியாமல் நள்ளிரவில் ஒப்பந்தம் வைத்துள்ளனர். அதனை முதலில் ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அப்பொழுது மன்றத்தில் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஒன்றிய குழுவிற்கு வருகின்ற பொது நிதிகளை ஒன்றிய குழு தலைவருக்கே தெரியாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் இருவரும் இணைந்து ஒப்பந்தங்களை விடுவதாகவும், மற்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
அதேபோல் கடத்தூர் அருகே உள்ள மணியம்பாடி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் செய்யப்படுகின்ற பணிகளுக்கு பணியாளர்களை பயன்படுத்தாமல், ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு வேலை செய்துவிட்டு, பிறகு பணியாளர்கள் செய்தது போல் ஊராட்சி நிதியில் பணம் பெறுவதற்கு பணியாளர்கள் ஒருவருக்கு தலா 500 ரூபாய் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பணிதல பொறுப்பாளர்கள் தமிழ்செல்வி வசூல் செய்வதாக மன்ற உறுப்பினர்கள் புகார் எழுப்பினர்.