கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளின் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதாலும் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (03.08.22) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வினாடிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வரத்து இருந்தது.
இதனிடையே மத்திய நீர் ஆணையம் இன்று இரவு வெளியிட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கையில், கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வினாடிக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் தர்மபுரி உள்ளிட்ட காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.