தருமபுரி:அரூர் பகுதியில் உள்ள விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர், தனியார் கடை ஒன்றில் தனியார் நிறுவன ரகமான ‘ஈஸ்வர்-22’ என்ற ரக விதை நெல் வாங்கி நாற்று வளர்த்து வயல்களில் நடவு செய்தனர். இது, நடவு செய்த 53 நாட்களிலேயே கதிர் விடத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதுபற்றி செய்தி வெளியான நிலையில் வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, விதை நெல் விற்பனை செய்த கடையிலும், விவசாயிகளின் வயல்களிலும் நேற்று (அக்.18) மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இன்று (அக்.19) பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பையூர் அறிவியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் வயல்களில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, ஆய்வுக்குப் பின் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக பேராசிரியர் கீதா கூறுகையில், “தனியார் நிறுவன ரக விதை நெல்லை அரூர் பகுதியில் உள்ள அக்ரோ சர்வீஸ் கடையில், இப்பகுதி விவசாயிகள் வாங்கி நாற்று வளர்த்து வயல்களில் நடவு செய்துள்ளனர். இந்த விதை நெல், 120 நாட்களில் விளைச்சல் தரும் குறுவை ரக நெல் எனக் கூறி விவசாயிகளிடம் விற்றுள்ளனர்.
இதுபோன்ற ரகங்கள் 75 முதல் 80-வது நாளில் தான் கதிர்கள் விடும். ஆனால், இப்பகுதி விவசாயிகளின் வயல்களில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் குறைந்த காலத்திலேயே கதிர் விட்டுள்ளன. இதை சரிசெய்ய சில பரிந்துரைகளை விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளோம். அதை விவசாயிகள் பின்பற்றிய பிறகு பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்த வயல்களில் கள ஆய்வு மேற்கொள்வோம்.