தருமபுரி: பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி செந்தில்குமார் தருமபுரி மாவட்டம், மஞ்சவாடி கணவாய் முதல் மாவட்ட எல்லை முடியும் வரை உள்ள 2 வழிச்சாலையை நான்கு வழி சாலையாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக வாணியம்பாடி முதல் ஏ.பள்ளிப்பட்டி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து நிறைவுபெற்றது.
கடந்த 2019ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி எ.பள்ளிபட்டி சாலையானது மிகவும் சேதம் அடைந்து, இச்சாலை வழியாக சென்னை பயணம் செய்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை நாள்தோறும் தொடர்கதையாக இருந்தது.
சாலை அமைக்க ஒப்பந்தம் முடிவுற்று ஏழு மாதங்கள் கடந்தும் சாலைப் பணிகள் தொடங்காததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். அதனை அறிந்த தருமபுரி எம்.பி.செந்தில்குமார் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி சாமியபுரம் கூட்ரோடு பகுதியில் ஆய்வு செய்தார்.
சாலையில் குண்டும் குழியுமாக இருந்த பகுதியில் டேப் வைத்து குழியின் ஆழத்தை அளவீடு செய்தார். ஆய்வின்போது ஒப்பந்ததாரர் வராததால் கோபமடைந்த எம்.பி. செந்தில் குமார், அதிகாரிகளிடம் ஏன் பணியை ஆரம்பிக்கவில்லை என கேட்டார். அதிகாரிகள் பதில் கூற முடியாமல் திணறினர்.
அடுக்கடுக்காக அவர் எழுப்பிய கேள்விகள் அப்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது . பின் இரு வழி சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்தது. சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டு என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.