தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "தர்மபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவ்வாறு இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர் என்ற விவரம் குறிப்பிடப்படாமல் வழங்கப்படுவதாக பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் முறையிடுகின்றனர்.
இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் பல்வேறு காரணங்களால் இறந்திருக்கலாம், எனினும் இறந்தவர்களில் பலர் இறப்பிற்கான உண்மைத் தன்மையினை கண்டறிந்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழ்களில், நோயாளி தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர் என்ற விவரம் குறிப்பிட வேண்டும்.
இதனால், குடும்பத்தலைவர் அல்லது குடும்பத்தலைவியை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் தற்போது அரசு அறிவித்துள்ள கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு சலுகைகளை பிற்காலத்தில் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.
இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து, உண்மையில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழில், இறப்பிற்கான காரணத்தை குறிப்பிட்டு வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.