தருமபுரி: வழக்கில் உள்ள மல்லிகாவின் தந்தை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாததாக அன்பழகன் தரப்பில் கூறப்பட்ட நிலையில் வழக்கு மீண்டும் ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் கடந்த 2016-21 வரை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் ரூ.45.20 கோடி சொத்து தொடர்பான இந்த வழக்கில் கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன் மற்றும் உறவினர்கள் என 11 பேரின் பெயர்கள் சேர்க்கப் பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த மே மாதம் 22ஆம் தேதி தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்பு காவல்துறை தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பொங்கல் தொகுப்புடன் வெள்ளம் பாதித்த மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!
இந்த வழக்கு தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலிருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, விசாரணை தொடங்கியது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் முறையாகச் சமன் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய ரவிசங்கர், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே நீதி மன்றத்தில் ஆஜராகினர். மேலும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் ஆகியோர் இன்று ஆஜராகவில்லை.
இந்நிலையில் அந்த வழக்கில் உள்ள மல்லிகாவின் தந்தை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால், இன்று விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என வழக்கறிஞர்கள் மூலம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் வழக்கு விசாரணை வருகிற ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் நினைவு தினம்; புகழஞ்சலி கூட்டத்தில் கண்கலங்கிய அமைச்சர்!