தருமபுரி மாவட்டம் வத்தல் மலை கிராமத்தில் வத்தல்மலை, பெரியூர், சின்னாங்காடு, கொட்டலகாடு, ஒன்றியங்காடு, மண்ணாங்குழி, நாயக்கனூர், பால்சிலம்பு, குழியனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கு நகர்ப்புறத்தை நோக்கி வருவதற்கு சுமார் 20 கிலோ மீட்டர் கடந்து வரவேண்டும்.
இந்த மலைப் பகுதியில் விவசாயம் செய்துவரும் மலைவாழ் மக்கள் விவசாயத் தேவைகள், வங்கிக் கடனுக்காக அடிவாரப் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று வந்தனர்.
மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக அரசு சார்பில் செயல்படும் மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நீண்ட நாள்கள் வத்தல்மலை மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு சுமார் 800 குடும்ப அட்டைகளைப் பிரித்து மழைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தை தோற்றுவித்தது.
இதனை கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு தலைவர், இயக்குனர்களையும் எட்டு கிராம மக்களுக்கு தெரியப்படுத்தாமல் ஒருதலைபட்சமாக அதிமுகவினரை மட்டுமே நியமித்து சங்கத்தை நடத்தி வருகின்றனர்.
மக்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமான முறையில் அவசரமாக அதிமுகவினரை மட்டுமே தலைவர், இயக்குனர்களாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் மலைவாழ் மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படாது. மேலும் மலைவாழ் மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இல்லை. அனைத்து கிராம மக்களுக்கும் சமமான அளவில் இயக்குனர்களை வழங்க வேண்டும். அதற்கு முறையான அறிவிப்பு செய்து, தலைவர், இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
மேலும் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தி எட்டு கிராம மக்கள் ஒன்றிணைந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.