தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த வட்டுவனஅள்ளி ஊராட்சியில் கோட்டூர், அலக்கட்டு, ஏரிமலை ஆகிய மூன்று மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் எட்டு கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான பாதைகளைக் கடந்து சென்றால்தான், இந்த மூன்று மலைக் கிராமங்களை அடைய முடியும். வானம் பார்த்த பூமி. மானாவாரி விவசாயம் தான் பிராதானமான வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மலை வாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மூன்று மலைக்கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் தினந்தோறும் 7 கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் வரை நடந்தே சென்று, அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. தற்போது கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இம்மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தினக்கூலித் தொழிலாளர்களாக இருப்பதால் போதிய வருமானம் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர்.