தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் மக்களின் நடமாட்டம் குறைந்தபாடில்லை. அத்தியாவசிய பொருள்களை வாங்க செல்வதாகக் கூறிவிட்டு இளைஞர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் நகர்வலம் வருகின்றனர்.
அவர்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அவர்கள் அஞ்சுவதாக இல்லை. இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஒருவர் டிராக்டர் ஓட்டுநர் போல சென்று ஊரடங்கை கடைப்பிடிக்காமல் குழுமியிருந்த பொதுமக்களை மிரள வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தருமபுரி மாவட்ட அரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தானூர் ஏரிக்கரை கோயில் அருகே, சிலர் கும்பலாக தாயம் விளையாடுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. ஆனால், காவல் துறை வாகனத்தில் சென்றால் அனைவரும் உஷாராகி கிளம்பிவிடுவார்கள் என்பதால், காவல் ஆய்வாளர் கண்ணன் டிராக்டரில் சென்றுள்ளார்.
டிராக்டர்தானே வருகிறது என்ற நினைப்பில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். காவல் ஆய்வாளர் மெதுவாகச் கும்பல் கூடியிருந்த இடத்திற்குச் சென்றுள்ளார். அதனைச் சற்றும் எதிர்பாராத அவர்கள், கண்ணனைக் கண்டவுடன் தாங்கள் கொண்டுவந்த இருசக்கர வாகனத்தைக்கூட மறந்துவிட்டு அங்கிருந்து ஓடினர். இதையடுத்து நின்றிருந்த 14 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து, காவல் நிலையத்திற்கு கண்ணன் கொண்டு சென்றார்.
இதையும் படிங்க:காவல் ஆய்வாளரின் மனிதநேய செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு!