தருமபுரியில் சகல வசதிகளுடன் கூடிய இரண்டடுக்கு பேருந்து நிழற்கூடம் - கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திறப்பு! தருமபுரி:மறைந்தமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் தமிழகத்தில் நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் நாளை கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு உலக அளவில் முதன் முறையாக சூரிய ஒளி மின் வசதி மூலம் செயல்படும் நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன இரண்டடுக்கு பேருந்து நிழற்கூடம் தருமபுரியில் திறக்கப்பட உள்ளது.
இந்த இரண்டடுக்கு பேருந்து நிழற்கூடம் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியுடன் பயணிகளுக்கு இரண்டடுக்கு தளத்தில் இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தானியங்கி பரிவர்த்தனை எந்திரத்துடன் கூடிய ஏ.டி.எம் மையம், சிறப்பு அங்காடி, தானியங்கி சூரிய மின் சக்தி நிலையம் மற்றும் 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:Ilayaraja: 80வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா.. பரிசுடன் நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
மேலும் அதனைத் தொடர்ந்து பொழுது போக்கு விரும்பிகளுக்காக 24 மணி நேரமும் இலவச வைஃபை வசதி, தருமபுரி பண்பலை வானொலியை கேட்கும் வசதி மற்றும் தொலைக்காட்சி பெட்டி வசதிகளும் உள்ளது. அதோடு நிறுத்தாமல், தாய்மார்களுக்கு பயன்படும் வகையில் குளிர்சாதன பாதுகாக்கப்பட்ட தாய்-சேய் பாலூட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது.
புத்தக விரும்பிகளுக்கான மினி நூலக வசதி, படிப்பு அறை (reading room) அமைக்கப்பட்டு செல்பி பாயிண்ட், சார்ஜிங் பாயிண்ட் மற்றும் அதிநவீன வர்த்தக விளம்பர எல்.இ.டி பலகையும் அதி நவீன நிழற் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இத்தனை வசதிகளும் உள்ள பேருந்து நிலையம் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் திறப்பு விழா நாளை (ஜூன் 3) கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறவுள்ளது. இதில் உள்ள வசதிகளை ஈடிவி பாரத் தமிழ்நாடு பிரேத்யேகமாக காட்சிப் பதிவு செய்துள்ளது. தருமபுரி தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் எம்.பி. செந்தில்குமாரின் இந்த ஈரடுக்கு பேருந்து நிழற்கூடம் தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க:முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!