தர்மபுரி: நவீன ஸ்கேன் கருவியுடன் வீடுகளுக்கே சென்று, கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா? என கண்டறிந்து, கருக்கலைப்பில் கும்பல் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மருத்துவர் கனிமொழி மற்றும் நகர காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ராஜபேட்டை ஏரிக்கரை அருகே உள்ள வெங்கடேசன் என்பவரின் வீட்டில் இருந்தபோது கும்பலை காவல் துறையினர் பிடித்தனர். விசாரணையில் அந்த பகுதியில் 4 கர்ப்பிணிகளிடம் ரூ.6,000 கட்டணமாக கும்பல் பெற்றது தெரியவந்தது.
வீட்டிலேயே ஸ்கேன் செய்து கருக்கலைப்பு இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதில் திருப்பத்தூரை சேர்ந்த ஜோதி (33), சதீஷ்குமார் (37), சுதாகர் (37) ஆகியோர் தங்களை மருத்துவர்கள் என்று கூறி வந்துள்ளனர்.
இவர்களுக்கு உடந்தையாக தர்மபுரியை சேர்ந்த சரிதா (40), குமார் (38) வெங்கடேசன் (33) ஆகியோர் இருந்தது வந்துள்ளனர். கருவில் பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பை தருமபுரியை சேர்ந்த செவிலியர் கற்பகம் (38) என்பவர் செய்துவந்துள்ளார்.
மேலும் இவர்கள் பயன்படுத்திய 2 கார்கள், ஆட்டோ, இருசக்கர வாகனம், ஸ்கேன் கருவி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கும்பலிடம் யார் யார் தொடர்பில் இருக்கின்றார்கள், இவர்களிடம் கருக்கலைப்பு செய்தவர்கள் எத்தனை பேர் போன்றவை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:குழந்தையை கடத்துவதாக கருதி வடமாநில இளைஞர் மீது தாக்குதல்